தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் நான் பின்வாங்கப் போவதில்லை என்று சுவப்னா சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுர்களுக்கு தொடர்பு உள்ளதாக சுவப்னா சுரேஷ் கூறினார். இதனைத்தொடர்ந்து முதல்-மந்திரி பினராயி விஜயனை பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இந்தநிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் சுவப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை விமர்சித்து முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக வக்கீல் கிருஷ்ணராஜ் மீது சட்டப்பிரிவு 295 ஏ-ன் கீழ் ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பாலக்காட்டில் உள்ள வீட்டில் வைத்து நிருபர்களுக்கு சுவப்னா சுரேஷ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
முதல்-மந்திரி பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரின் மீதும் நான் ரகசிய வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. சரித்குமாரை போலீஸ் பிடித்துச் சென்று, ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என்று ஷாஜ் கிரண் கூறினார். அதேபோல நடந்தது. என்னுடைய வக்கீல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்றார். அதுவும் நடந்துள்ளது. என்னை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. என்னை கொன்று விடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும்,’ என தெரிவித்தார்.