துறையூர் அருகே பிரசித்தி பெற்ற பெருமாள்மலை பிரமோற்ச விழாவின் முக்கிய நிகழ்வான 9ம் நாள் தேர் திருவிழாவில் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி உபய நாச்சியரோடு தேரில் எழுந்தருளி கிரிவலப் பாதையில் பவனி சென்றார்.
துறையூர் அருகே 3 கிமீ தொலைவில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் பெருமாள்மலை உள்ளது. மலை மீது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உபய நாச்சியார்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரமோற்சவ விழா 11 நாட்கள் நடைபெறும். நிகழாண்டில் கடந்த 4ம் தேதி பிரமோற்சவ விழா கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி மலையிலிருந்து உற்சவ மூர்த்தி பெருமாள் உபய நாச்சியார்கள், ஆழ்வார்களுடன் கீழிறங்கி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கொழுவிருந்தும், அன்ன, யானை, கருட, சிம்ம வாகனத்திலும், இந்திர விமானத்திலும் முறையே ஒவ்வொரு நாளும் கிரிவலப்பாதையில் வீதி உலா சென்றும் பொதுமக்களுக்கு அருள்பாலித்தார்.
பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான 9ம் நாள் தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
துறையூர் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமார் முசிறி எம்எல்ஏ ந. தியாகராஜன்(முசிறி), அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்ட விழாவைத் தொடக்கி வைத்தனர்.
திரளான மக்கள் கலந்து கொண்டனர். கிரிவலப் பாதையில் வழி நெடுக ஆங்காங்கே பக்தர்கள் தேரில் பவனி சென்ற பெருமாளுக்கு தேங்காய் பழம் வெற்றிலைப் பாக்கு கொண்டு சிறப்பு செய்து குடும்பத்தினருடன் வழிபட்டனர்.

