வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள், சட்ட விதிகள் மற்றும் கடைகள் குறித்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்று இன்று அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழகம் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
குற்றம் சாட்டப்பட்ட நபர்களை சந்தேக நபரை அடிக்கவோ அல்லது சித்தரவதை செய்யவோ கூடாது. இதுகுறித்து அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மேல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தனிப்படை (சிறப்பு பிரிவு)கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையம் தவிர லாட்ஜ்கள், குடியிருப்புகள் போன்றவற்றில் தங்க வைக்க கூடாது.
குற்றம் சாட்டப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும், கண்டிப்பாக சட்டவிரோத காவலில் குற்றவாளியை வைக்கக் கூடாது.
குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்படும்போது, காவலில் வைக்கப்படுவதற்கான இலக்கு நேரத்தை மாவட்ட எஸ்பி வழங்க வேண்டும். இந்த இலக்கு நேரம் கண்டிப்பாக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்படுத்தும் ரிமாண்ட் வேலையை ‘சிசிடிஎன்எஸ்’ மூலம் செய்யாமல் தன்னிச்சையாக ரிமாண்ட் வேலையை விரைவுபடுத்துவதற்காக அதற்குறிய ஆவணங்களை தயார் செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் இதர பணிகளுக்கு, அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் அல்லது உதவி ஆய்வாளர்களை நியமிக்கலாம். இதனால் சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வேலையில் கவனம் செலுத்த முடியும்.
குற்றவாளியை கைது செய்வதற்கு முன்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறாரா அல்லது ஸ்டேஷன் ஜாமீனில் விடப்படவுள்ளாரா அல்லது அவரை இரவு காவலில் வைக்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதற்குறிய ஆவணங்களை விசாரணை அதிகாரி தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
குற்றவாளியிடம் வாக்குமூலம் பெறும் போது வன்முறையை கையாள்வது கூடாது, கேள்விகள், கைரேகை மற்றும் சிடிஆர்எஸ் மூலம் விஞ்ஞான விசாரணை நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
களவு சொத்தை மீட்பதற்கு குற்றவாளிகள் மீது அதிகாரிகள் தேவையற்ற அழுத்தம் தர தேவையில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையினரைத் தாக்கும் வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்தால், காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை அதே காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட்டில் ரிமாண்ட் செய்யப்படும் வரை டிஎஸ்பி காவல் நிலையத்தில் இருக்க வேண்டும். மேலும் காவல் துறை தாக்குதல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி அதே காவல் நிலையத்திலிருந்து இருக்கக்கூடாது.
குற்றவாளிகள் போலீஸ் காவலில் இருக்கும் காலம் முழுவதும் தனிப்பிரிவு காவலர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் இருக்க வேண்டும். காவலில் உள்ள நபர்களுக்கான உணவு மற்றும் மருந்துகளையும் அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தனிப்பிரிவு காவலர், காவல் நிலையத்தில் உள்ள குற்றவாளி காவல் விவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, அவ்வப்போது தெரிவிக்கவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
லாக்அப் மரணங்கள் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு:
கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும்.
காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முழுமையாக செய்யப்பட வேண்டும். உண்மையான சோதனையின்றி உடற்தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறையை நிறுத்தி கொள்ள வேண்டும்.
மது, போதைப்பொருள் போன்றவற்றுக்கு அடிமையான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படக் கூடாது, ஏனெனில் அவர்கள் போதைப்பொருள் கிடைக்காத காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டு இறந்து விடுவார்கள்.
காவல் நிலையம், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றில் சிசிடிவி பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும். போலீஸ் சித்தரவதை பற்றிய தவறான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவர் கால் – கை வலிப்புநோய் தொடர்பான வரலாறு குறித்து முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும்.
சந்தேக நபர்களை பொதுமக்கள் அடிக்கும்போது, அவரை சம்பவயிடத்திலிருந்து இருந்து நேரடியாக 108 ஆம்புலன்ஸ் அல்லது பிற தனியார் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களை காவல் நிலையத்திற்குள் கொண்டு வரவோ அல்லது போலீஸ் காவலில் எடுக்கவோ கூடாது.
சந்தேக நபர்களை போலீசார் கையாளும் விதம் தொடர்பான வழிமுறைகள்:
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்காக காவல் நிலையத்திற்கு குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு வரக்கூடாது.
அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தப்பட்டு சரியாக வேலை செய்வதை உறுதி செய்து கொள்ளவும்.
குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்கும்போது அவர்கள் கொடுங்குற்றவாளியாக இருந்தால் தவிர அவர்களை விரட்டக் கூடாது.
சிவில் விவகாரங்களில், புகார்தாரரின் கோரிக்கைகளின்படி பிரச்னையைத் தீர்க்க, எதிர் மனு தாரருக்கு காவல் துறை தேவையற்ற அழுத்தம் கொடுக்கக் கூடாது.
சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அதற்குக் கீழே உள்ளவர்கள் சிக்கலான சிவில் விஷயங்களை விசாரிக்க அனுமதிக்கக் கூடாது.
மாவட்ட குற்றப்பிரிவு, எஸ்சிஎஸ் மற்றும் ஏஎல்ஜிஎஸ்சி ஆகியவற்றின் மீது மாவட்ட எஸ்பி முழுமையான கண்காணிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
அவர்கள் தோராயமாக ஆட்களை அழைத்துச் செல்லக்கூடாது, மேலும் கைது செய்வதற்கு முன் வயது மற்றும் உடல் நலக் காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.