போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில் அவர், வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. ‘சேப் மூன் வேல்டு’ என்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஏஞ்சல்(வயது 23) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து மோசடி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டு வேலை மோகத்தில் இருந்த 50 பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
