சென்னையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தத்தால் பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர் கோயம்பேடு உட்பட பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக தாம்பரம் – 13 செ.மீ., தரமணி – 11 செ.மீ., கட்டப்பாக்கம் – 9.5 செ.மீ., சென்னை விமானநிலையம் – 9 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை மற்றும் பலத்த காற்றால் சென்னையில் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. ஜெர்மனி, தோகா, துபாய், மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் ஐதராபாத், பெங்களூரு திரும்பின.மலேசியா, தாய்லாந்து, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 12 விமானங்கள் நடுவானில் வட்டமடித்தன. நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை, இடி, மின்னல், காற்று ஓரளவு ஓய்ந்த பின் விமானங்கள் ஒவ்வொன்றாக தரை இறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சிங்கப்பூர், துபாய், பஹ்ரேன், டோஹா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஹைதரபாத், புனே, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்கள் சென்னையில் இருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
