காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலும், குல்காம் மாவட்டத்திலும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டம் லோலேப் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் அது என்கவுண்ட்டர் வேட்டையாக மாறியது.
இதில் பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரிடம் சிக்கினார். அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் சவுகத் அகமத் சேக் என தெரியவந்தது. நீடித்த துப்பாக்கி சண்டையில் மற்றுமொரு பயங்கரவாதி பின்னர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதேபோல் குல்காம் மாவட்டம் டாம்ஹல் கஞ்ச் போரா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெயர்கள் ஹாரிஸ் ஷெரிப் மற்றும் ஜாகிர் பட்டெர் என்று தெரியவந்துள்ளது.
