திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நிர்வாகிகளுக்கு முறையாக தலைமைச் கழகத்தில் இருந்து பதிவு தபால் அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு ஒப்புகை கடிதம் பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். எழுதியதாக வைத்தியலிங்கம் வெளியிட்ட கடிதம் பற்றி எனக்கு தெரியாது.
பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று பன்னீர்செல்வம்தான் கூறினார். 2 நாட்களுக்கு முன்பு பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த விவாதத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். தீர்மான குழுவில் ஒருங்கிணைப்பாளர் பங்கேற்றதே ஒரு அத்தாட்சிதான். பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான ஆலோசனையில் ஓ.பி.எஸ். கலந்து கொண்டார். அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அனுமதிக்கலாம் என ஒருங்கிணைப்பாளரே கூறினார் என தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நிச்சயம் வருவார், தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்வார் என கே.பி.முனுசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுக்குழுவை கட்டாயம் கூட்ட வேண்டும் என்று 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கக்கூடாது என்று ஓ.பி.எஸ்.தான் கூறினார் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
