அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை 8-வது நாளாக நீடித்து வரும் சூழலில், தங்களது ஆதரவு நிர்வாகிகளுடன் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனிதனியாக இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வருகை தந்தார். வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்.பி. தர்மர் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்
இந்த நிலையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேச ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இன்று அ.தி.மு.க .அம்மா பேரவையினர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர். அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
ஜெயலலிதாவின் செயல்வடிவம் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர் செல்வம் மனமுவந்து எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக அறிவிக்க வேண்டும்.பரிந்துரை,நிர்வாகிகள் நியமனத்தில் ஓ.பன்னீர் செல்வம் பாராபட்சமாக செயல்பட்டார். அ.தி.மு.க.வில் அவர் வகித்த பதவிகளை யாரும் வகித்ததில்லை. அவர் நடவடிக்கை சரியில்லை என்பதால் தான் நாங்கள் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்கிறோம் என கூறினார்.
