அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்ற ஓபிஎஸ் கோரிக்கையை போலீஸ் நிராகரித்தது.
ஒற்றைத் தலையை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இருக்கக்கூடிய திருமண பண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்துக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தின் மனு அளிக்கப்பட்டிருந்தது.
அதில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு குறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இது குறித்து ஆவடி காவல் ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தனி நபருக்கு சொந்தமான உள் அரங்கத்தில் கூட்டம் நடப்பதால் தலையிட முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும். பொது இடத்தில் நடந்தால் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எங்களது கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.