ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை 50 மணி நேரம் விசாரணை நடத்தி முடித்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியுள்ளது.

கடந்த 13ம் தேதி அமலாக்கத்துறை முன்பு முதன்முதலாக ராகுல்காந்தி ஆஜரானார். அதன்பின் 14 மற்றும் 15ம் தேதிகளிலும் அவரிடம் விசாரணை நடந்தது. மூன்று நாட்களிலும் மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் நேற்றும், நேற்று முன்தினமும் ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 50 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக பழிவாங்கும் அரசியலில் ஒன்றிய அரசு ஈடுபடுவதாக கூறி, நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி தொண்டர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியிடம் அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் தீவிரப்படுத்த வேண்டும். அடிப்படை ஆதாரமற்ற வழக்கில் ராகுல்காந்தியிடம் தொடர்ந்து விசாரிப்பது நியாயமற்றது. எனவே, கட்சியின் அனைத்து மாநில எம்பி, எம்எல்ஏக்களும் டெல்லிக்கு வரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில், இன்று அவர் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. அதேநேரம் நாளை (ஜூன் 23) காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆஜராக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, கடந்த 13, 14, 15, 20 மற்றும் 21ம் தேதிகளில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் இதுவரை மொத்தம் 50 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி மட்டும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். கடந்த 12ம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இருதினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ஏற்கனவே சம்மனை ஏற்று சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணைக்கு ஆஜராவதை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இத்தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `கொரோனா, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டதால் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, முழுமையாக குணம் அடையும் வரையில் மேலும் சில வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி அமலாக்கத் துறைக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார்,’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோரிக்கையை ஏற்று, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் கொடுத்துள்ளது. சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது அமலாக்கத்துறை. இருப்பினும் சோனியா காந்தி எப்போது ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தேதி குறித்த அறிவிப்பை தெரிவிக்கவில்லை.