கடலூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பேர் பலியாகிய நிலையில் இன்று காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலி எண்ணிக்கை நான்கு ஆனது.
கடலூர் முதுநகர் அருகே பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). இவர் தனது மனைவி வனிதா பெயரில், எம்.புதூரில், நாட்டு வெடிகள் தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை வைத்துள்ளார். நேற்று காலை இந்த தொழிற்சாலையில், டி.என் பாளையம் பகுதியை சேர்ந்த ராஜூ (34), பெரிய காரைக்காடு சித்ரா (35), வான்பாக்கம் அம்பிகா, குடிதாங்கி வசந்தா (45), எம்.புதூர் பகுதியைச் சேர்ந்த ஜிந்தா (22), மூலகுப்பம் பகுதியை சேர்ந்தசத்யராஜ் (32) ஆகியோர் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் ராஜியும், ஜிந்தாவும் சாப்பிடுவதற்காக வெளியே சென்றனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகளில் தீப்பற்றியதால், பயங்கர சத்தத்துடன் அவை வெடித்து சிதறின. இதனால் ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்து, அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது சத்தியராஜ், சித்ரா, அம்பிகா ஆகிய 3 பேரும், உடல் சிதறி உயிரிழந்து கிடந்தனர். மேலும் வசந்தா 85 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே விபத்து நடப்பதற்கு, சற்று நேரத்திற்கு முன்னதாக, வெள்ளக்கரை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் (37), துக்க நிகழ்ச்சிக்காக நாட்டு வெடி வாங்க வந்து மரத்தடியில் காத்திருந்துள்ளார். விபத்தில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலையின் உரிமம், கடந்த 2020ல் முடிவடைந்துள்ளது. மீண்டும் உரிமம் வழங்கப்படவில்லை.