கர்நாடகா பெலகாவி மாவட்டத்தில் உள்ள மூடலகி கிராமத்தில்
கருச்சிதைவு செய்யப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ளது மூடலகி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள டவுன் பஸ் நிலையத்தில் சில டப்பாக்கள் கிடந்துள்ளன. கேட்பாரற்று கிடந்த அந்த டப்பாக்களை திறந்துபார்த்தபோது அதில் கருச்சிதைவு செய்யப்பட்ட சிசுக்களின் சடலங்கள் இருந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இது குறித்து பெலகாவி மாவட்ட சுகாதார மற்றும் குடும்பநல அலுவலர் டாக்டர் மகேஷ் கோனி கூறுகையில், “ஒரு உலோக டப்பாவில் ஏழு சிசுக்களின் சடலங்கள் இருந்தது. அவை அனைத்து பெண் சிசு சடலங்கள் என சந்தேகிக்கிறோம். அனைத்துமே 5 மாதம் வளர்ந்த கரு. பாலின சோதனைக்குப் பின்னர் இந்த கருக்கலைப்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கலைக்கப்பட்ட 7 கருக்களும் மாவட்ட அறிவியல் மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது” என்றார்.
