சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள் காரை
தாக்கி தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தி துவம்சம் செய்தது வாகன ஓட்டிகளை பதற்றத்துக்குள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகளும் வசிக்கின்றன. ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், குட்டியுடன் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நீண்ட வரிசையில் நின்றிருந்த வாகனங்களின் நடுவே காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. காட்டு யானைகளைக் கண்டு அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நீண்ட வரிசையில் நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, திடீரென வாகனங்களை காட்டு யானைகள் துரத்தத் தொடங்கியதால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் யானைகளிடமிருந்து தப்பிப்பதற்காக வாகனங்களை திருப்ப முயற்சித்தனர். அப்போது ஒரு வெள்ளை நிற காரை கண்டு அச்சமடைந்த காட்டு யானைகள் திடீரென காரை தும்பிக்கையால் தாக்கத் தொடங்கின. அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய ஒரு நபர் தப்பியோடினார். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன.
தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய காட்டு யானைகள் திடீரென காரை தாக்கி தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தியதால் அங்கு லேசான பரபரப்பு ஏற்பட்டது.