2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் 8 ஆண்டுகள் ஆட்சி நிறையும் தருவாயில் இன்னும் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தை பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
19 மாநில பா.ஜ., ஆளும் முதல்வர்கள், மூத்த தலைவர்களான அமித்ஷா, நிதின்கட்காரி ,வசுந்த்ரா ராஜே, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். நாளை (ஜூன்-3) நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கவும், அங்கு எற்பட்டுள்ள ஊழல் நிலையை மக்களுக்கு தெரிவிக்கவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகளுக்கு தெலுங்கானாவில் புகழ் பெற்ற முத்து மாலை அணிவிக்கப்பட்டது. தலைவர்கள் வரும் போதும் பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்றனர். நடிகை குஷ்பு அங்கு நடந்த பாரம்பரிய தெலுங்கானா கலாசார கலைஞர்களுடன் கோலாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடினார்
கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் தேசிய அளவிலான பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் செயற்குழுவில் பங்கேற்கிறார்கள். தமிழகம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு பங்கேற்றுள்ளனர். பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஐதராபாத் வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார்.
ஐதராபாத் வந்து இறங்கியதும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்க உள்ளதாக கூறி உள்ளார்.
மோடியை வரவேற்பை புறக்கணித்த தெலுங்கானா முதல்வர்..
ஹைதராபாத் நகரில் நடைபெறும் பாஜக தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் மோடிக்கு தெலங்கானா அரசு சார்பில் அம்மாநில அமைச்சர் ஒருவர் மட்டுமே சென்று வரவேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெறும் பாஜக தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஹைதராபாத் வருகை தந்தார். அவரை தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்கவில்லை.
மேலும் தெலங்கானா அரசு சார்பில் அமைச்சர் ஒருவர் மட்டுமே சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். ஆனால் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் களம் இறக்கப்பட்டு இருக்கும் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டுவதற்காக ஹைதராபாத் சென்றார். அவரை முதலமைச்சர் சந்திர சேகர ராவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் சென்று வரவேற்றனர். இந்த நிகழ்வு தெலங்கானா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.