வார விடுமுறையையொட்டி, பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ் பெற்றது. இங்கு தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இதேபோல் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கையும் செலுத்துகின்றனர். இந்நிலையில் இன்று வார விடுமுறை என்பதால், பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக மலைக்கோவில், பாதவிநாயகர் கோவில், அடிவாரம், கிரிவீதி ஆகிய இடங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். இதேபோல் தரிசன வழிகள், மலைக்கோவில் செல்வதற்கான பாதைகள் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயிலில் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பலர் வந்தனர்.
எனவே மின்இழுவை ரெயில்நிலையத்திலும் கூட்டம் காணப்பட்டது.அதேபோல் மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.