தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:
சர்தார் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவின் அடித்தளத்தை அமைத்ததாகவும், இப்போது அதை மேலும் முன்னெடுத்துச் செல்வது பாஜகவின் பொறுப்பு என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார். வம்ச அரசியல்,வாரிசு அரசியல் கட்சிகளால் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்றும், இதுபோன்ற கட்சிகள் நீண்ட காலம் நீடிப்பது கடினம் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது இறுதி வீழ்ச்சியில் உள்ளன; அவர்களை கேலி செய்யாமல் அவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வரும் பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்த அமித்ஷா வாரிசு அரசியல், சாதி வெறி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் ஆகிய பெரும் பாவங்களே, பல ஆண்டுகளாக நாடு அனுபவித்த துன்பங்களுக்கு காரணம் என்று கூறினார். இதையும் படியுங்கள்: இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சி அடைந்துள்ளன- பிரதமர் மோடி குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் உச்சநீதிமன்றத்தால் தவறானவை என்று அறிவிக்கப்பட்டதாகவும், இது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என அமித்ஷா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் இன்று பிளவுபட்டுள்ளது என்றும், கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடுகிறார்கள், ஆனால் கட்சித் தலைவரை அவரகள் தேர்ந்தெடுக்கவில்லை என்று அமித்ஷா கூறினார். காங்கிரசுக்கு மோடி குறித்த பயம் (ஃபோபியா) உள்ளதாகவும், தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும் உள்துறை மந்திரி குறிப்பிட்டார்.
அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜகவின் சகாப்தமாக இருக்கும் என்றும், இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் அவர் தெரிவித்தார். தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்துறை மந்திரி அழைப்பு விடுத்ததாகவும், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில் இருந்து வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குஜராத் கலவரம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் போது மோடி அமைதியாக இருந்ததாகவும், அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் வன்முறையை பரப்பியதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கண்டனம் தெரிவித்தார்.