December 8, 2024, 1:52 PM
30.3 C
Chennai

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா துவக்கம்..

திருநெல்வேலி சீமையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 11-ந் தேதி சிகர நிகழ்ச்சியான திருதேரோட்டம் நடக்கிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவில் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக உள்ளது.நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆனி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், 7.40 மணிக்கு பூங்கோவில் சப்பரம் உள்வீதி உலா வருதல் நடைபெற்றது. கொடியேற்றம் தொடர்ந்து சுவாமி சன்னதியில் உள்ள பெரிய கொடிமரத்தில் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

ALSO READ:  மதுரை மாவட்ட கோயில்களில் கந்த சஷ்டி - சூரசம்ஹாரம்!

தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். மேலும் கோவில் கலையரங்கில் மங்கள இசை, பரதநாட்டிய நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு, வாசுகி மனோகரின் பக்தி இன்னிசை அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. 11-ந் தேதி தேரோட்டம் விழாவில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதிஉலா வருதல் நடக்கிறது. மாலையில் கலையரங்கில் பல்வேறு பக்தி சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) 9-ம் திருநாள் அன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 9 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் என மொத்தம் 5 தேர்கள் இழுக்கப்படுகிறது. மறுநாள் 12-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.

ALSO READ:  அந்த விஷயத்தில் நாங்க பிஎச்டி., திருமாவளவன் எல்கேஜி.,: அன்புமணி பளிச்!

இந்த நிலையில் நெல்லையப்பர் கோவிலில் விரிவுபடுத்தப்பட்ட 500 பேருக்கான அன்னதான திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் 20 கோவில்களில் அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தினமும் 1,100 பேர் பயன் அடைந்து வருகிறார்கள். இதில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு தினமும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சட்டமன்ற பேரவையில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி, முக்கிய திருவிழா நாட்களில் தினமும் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நெல்லையப்பர் கோவில் ஆனித்தேர் திருவிழா நேற்று தொடங்கி உள்ள நிலையில், 500 பேருக்கு விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டமும் தொடங்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு பக்தர்களுக்கு உணவு வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week