இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. சைன்ஜ் பள்ளத்தாக்கில் உள்ள குல்லுவில் இருந்து 40 பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சைஞ்ச் நோக்கி அந்த பேருந்து சென்றுகொண்டிருந்தது. நியோலி-ஷான்ஷெர் சாலையில் உள்ள ஜங்லா பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலையில் இருந்து உருண்டு பள்ளத்தில் விழுந்தது.
இதில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறும்போது, இமாச்சல பிரதேச மாநிலம் குலுவில் நடந்த பேருந்து விபத்து நெஞ்சை உருக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் கருணைத் தொகையாக ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50, ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
குலு பேருந்து விபத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இமாச்சல பிரதேச கவர்னர், அம்மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குலு பேருந்து விபத்துக்கு இரங்கல் தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ‘தேசிய பேரிடர் மீட்பு படை’ உதவிக்கு அனுப்பப்படும் என உறுதியளித்தார்.