திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முதல் முறையாக ரூ.6.28 கோடி உண்டியலில் வருவாயாக கிடைத்தது. தற்போது இரண்டாம் முறையாக ஒருநாளில் ரூ.6.18 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்தும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த அளவு பக்தர்கள் தரிசனம் செய்து வந்ததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரார்த்தனை நிறைவேற்றுவதற்காக உண்டியலில் நகை, பணங்களை அதிக அளவில் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினசரி சராசரியாக ரூ.4 கோடிக்கு குறையாமல் உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் நேற்று 77,907 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,267 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.6.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முதல் முறையாக ரூ.6.28 கோடி உண்டியலில் வருவாயாக கிடைத்தது. தற்போது ரூ.6.18 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது 2-வது அதிகபட்சமாகும்.