மியான்மர் நாட்டின் தமு எல்லைப் பகுதியில் தமிழர்கள் 2 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பி மோகன் என்ற ஆட்டோ ஓட்டுனரும் எம். அய்யனார் என்ற வியாபாரியும் மணிப்பூர் மாநிலத்தில் வசித்து வந்தனர். சமீபத்தில் அவர்கள் இருவரும் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மொரே என்ற இடத்தில் இருந்து மியான்மருக்கு சென்றுள்ளனர். அப்போது தமு என்ற இடத்தில் இவர்கள் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் தலையில் துப்பாக்கியால் சுட்டு அவர்கள் கொடூரமாக கொலை செய்துவிட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட மோகனுக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.
மியான்மர் நாட்டில் செயல்படும் பியூ ஷா தீ என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவினர் இந்த படுகொலையை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட மோகன், அய்யனார் ஆகியோர் உடல்கள் தமு நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மியான்மர் ராணுவ அரசை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுள்ள இந்திய அரசு, இருவரின் உடல்களை தாய்நாடு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இருவரும் என்ன காரணங்களுக்காக மியான்மர் எல்லைக்கு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதை அடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி அந்த நாட்டுடனான சர்வதேச எல்லை மூடப்பட்டது. இருப்பினும் வர்த்தக தேவைகளுக்காக இரு நாட்டு மக்களும் எல்லைகளை கடந்து செல்வது வழக்கம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.