வரும் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இடைக்கால நிவாரணமாக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நிா்பந்திக்க முடியாது என நேற்று தெரிவித்திருந்த, சென்னை உயா் நீதிமன்றம் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்த நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், ‘ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுவைக் கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேறு நிவாரணங்களுக்காக உயா் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது என்று வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீா்கள்? எனக் கேள்வி எழுப்பினாா். அப்போது, பன்னீா்செல்வம் தரப்பு வழக்குரைஞா் ‘பொதுக் குழுவுக்கு தடை கோரும் இந்த வழக்கை உயா் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை வியாழக்கிழமை (ஜூலை 7) தாக்கல் செய்கிறோம். எனவே, விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என வாதிட்டாா். அப்போது நீதிபதிகள்,
‘உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிா்பந்திக்க முடியாது‘ என்றாா்.இதைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது‘ என்றுவாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார். இன்று அந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.