மராட்டிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது.
சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரண்டனர். இதையடுத்து, மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார். அதன்படி, கடந்த 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே அணியினர் மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். அதன்பின் கடந்த 3-ம் தேதி சட்டசபைக்கு புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டார். அதேபோல், 4-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றிபெற்றது.
இந்நிலையில், மராட்டியத்தின் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தல், புதிய சபாநாயகர் நியமனம், புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய நிகழ்வுகளை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு தொடர்பாக வரும் 11-ம் தேதி நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, மகேஸ்வரி அமர்வு முன் விசாரணைக்கு வரஉள்ளது.