உத்தராகண்ட் மாநிலம் ராமாநகர மாவட்டத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ராமாநகர மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில், இன்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் காரில் உறவினர் வீட்டுக்கு சென்றுக் கொண்டு இருந்தனர்.
அப்போது தேலா என்ற ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடி கொண்டு இருந்தது. ஆபத்தை அறியாமல் ஆற்றை கடக்க முயன்ற போது, காரை வெள்ளம் அடித்துச் சென்றது. பல மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்ட கார் பள்ளம் ஒன்றில் விழுந்து தலை கீழாக கவிழ்ந்தது.
காருக்குள் வெள்ளம் புகுந்ததால் மூச்சு திணறி 9 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் ஒரு சிறுமியை உயிருடன் மீட்டுள்ளனர். காரில் மரணம் அடைந்த 9 பேரில் 4 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டன. மற்ற 5 பேரின் உடல்கள் காருக்குள் சிக்கி இருப்பதால் அவற்றை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இதனிடையே தெஹ்ரி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வான நபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற போது மண் சரிவில் சிக்கி மரணம் அடைந்தார். உத்தராகண்டில் கடந்த 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் எச்சரிக்கையை மீறி சென்றதால் 10 பேர் மரணம் அடைந்ததாக போலீசார் கூறுகின்றனர்