இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதியடைந்து வரும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதியடைந்து வரும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.அரசு பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். ஆனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது.
மேலும் பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம், பிரமாண்ட பேரணி அதிபர் மாளிகை அருகே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போராட்ட அறிவிப்பு காரணமாக கொழும்பு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாலைகளில் ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆனால் ஊரடங்கை மீறி நேற்று நள்ளிரவு முதல் மக்கள் கொழும்பை நோக்கி படையெடுத்தனர். கொச்சிக்கடை பகுதியில் இருந்து தீப்பந்தங்களுடன் மக்கள் புறப்பட்டனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொழும்பு நோக்கி படையெடுத்தனர். கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினர், போலீசார் போராட்டக்காரர்களை தடுத்தனர். இதில் போலீசார்-போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொதுமக்களை விரட்டி யடிக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.
அப்போது போராட்டக்காரர்கள் டயர் களை கொளுத்தி தீவைத் தனர். இதுபோன்று பல இடங்களில் தள்ளு முள்ளு, தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இதனால் பெரும் பதற்றம் நிலவியது. இன்று காலையும் கொழும்பை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். பதுளை பகுதியில் இருந்து பேரணியாக மக்கள் சென்றனர். அதேபோல் பலர் லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். கொழும்புக்கு செல்லும் ரெயில்களில் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நூற்றுக்கணக்கானோர் 40 அடி நீளமுள்ள கண்டெய்னர் லாரியில் போராட்ட பகுதியை நோக்கி சென்றனர். போராட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் தடையை மீறி கொழும்புக்கு திரண்டு வந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால் கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை அருகே முன்னேறி சென்றனர். அங்கு தடுப்பு வேலிகளை அமைத்து ராணுவத்தினர், போலீசார் அரணாக நின்றனர். தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடியுள்ளார். அவர் நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.