இலங்கை அரசின் அனைத்து துறைகளிலும் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு அதிபர் மகிந்த ராஜபக்சே தனக்கு நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளை நியமித்து அவர்களை மலைபோல நம்பி பல அதிகாரங்களை ஒப்படைத்தார். ஆனால் அந்த ராணுவமே அவருக்கு எதிராக திரும்பியதால் தான் ராஜபக்சே குடும்பத்தினர் இன்று நாட்டைவிட்டே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அரசியலாளர்கள் கூறிவருகின்றனர்.
ஈழத் தமிழர்களை அழித்த ராஜபக்சே குடும்பத்தினர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், இனி தங்களை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினார்கள்.
அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலும், தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலும் அமர்ந்து கொண்டு ஆட்டம் போட்டனர். அவர்களது குடும்பத்தினர் மந்திரிகளாகவும், அரசின் உயர்துறைகள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகார மையங்களாகவும் மாறி இருந்தனர். அவர்கள் செய்த தவறுகளும், சொத்து குவிப்பும் மிக விரைவில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து இலங்கை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் அதிபர் கோத்தபய ராஜபக்சே மிகப்பெரிய தவறு ஒன்றை செய்தார். அன்னிய செலாவணி விஷயத்தில் தவறான முடிவுகளை எடுத்தார். அதோடு அரசின் அனைத்து துறைகளிலும் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு தனக்கு நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளை நியமித்தார். ராணுவ அதிகாரிகளை அவர் மலைபோல நம்பி பல அதிகாரங்களை ஒப்படைத்தார். ஆனால் அந்த ராணுவமே அவருக்கு எதிராக திரும்பியதால் தான் ராஜபக்சே குடும்பத்தினர் இன்று நாட்டைவிட்டே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் நாட்டில் முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அடுத்து சீனாவை முழுமையாக நம்பி மற்ற நாடுகளை பகைத்துக்கொண்டு செயல்பட்டது. அடுத்து தொலைநோக்கு பார்வையில்லாமல் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகள் பொருளாதாரத்தை மீட்க முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இலங்கை தள்ளாடித் தொடங்கியது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தை பொறுத்து பார்த்த மக்கள் மார்ச் மாதம் வீதிக்கு வந்து போராடத்தொடங்கினர்.
மார்ச் 31-ந்தேதி கொழும்பில் முதலில் போராட்டம் ஆரம்பித்தது. ஏப்ரல் 3-ந்தேதி எதிர்ப்புக்கு பயந்து ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார். மே 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுகிறார். ஈழத் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் செய்த அட்டூழியம் பாவமாக மாறி இன்று அவர்களை நாட்டை விட்டே துரத்தியுள்ளது. இதனால்தான் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு துரத்தப்பட்டதும், ஈழத் தமிழர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட தொடங்கிவிட்டனர்.