திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளா மிக முக்கியமான விழாவான ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் 4 ரத வீதிகளிலும் வலம் வரும். இன்று அதிகாலை 4-30 மணிக்கு சுவாமி அம்மன் தேருக்கு எழுந்தருளினர். இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் தேரோட்டமும் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.