இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் எனப்படும் எலக்ட்ரானிக் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டவுடன் 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆவர் வி.கே.சிங் இதனை தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி மூலம் பயண தூரத்திற்கு ஏற்ப சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை 2 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக வி.கே.சிங் தெரிவித்தார். நாட்டில் சுங்கச்சாவடிகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தேவையான நிலம் இல்லை என்றால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு 90% நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் மக்களுக்கு பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டால் திட்டம் கைவிடப்படும் என்றும் அமைச்சர் வி.கே.சிங் உறுதியளித்துள்ளார்.