நீட் தேர்வு ஹால்டிக்கெட் https:/neetnta.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் தகுதித்தேர்வு அவசியமாக்கப்பட்டு உள்ளது. “நீட்” என்று சொல்லக்கூடிய இத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும். இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) சேருவதற்கான நீட் தேர்வு வரும் ஜூலை17-ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து உள்ளனர். 497 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.
தேர்வு நடைபெறக்கூடிய நகரங்கள், மையங்களை ஏற்கனவே தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியாகவில்லை. இன்று காலை 11.30 மணி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாற்றம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை நீட் தேர்வு ஹால்டிக்கெட் https:/neetnta.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிவுரைகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன. இணைய தளம் வழியாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] என்ற இணைய தள முகவரியிலும் தெரிவிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப் சைட் www.nta.ac.in-ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.