சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கான நோட்டீஸ் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இந்த நோட்டீசை மயிலாப்பூர் வட்டாச்சியர் நந்தினி வழங்கினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் வெடித்தது.
இச்சம்பவம் காரணமாக அதிமுக தலைமை அலுவலுகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும் அதிமுக தலைமைக்கழக அலுவலகம் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி முறையீட்டுள்ளார். அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.