திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் சுப்பா ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்
ஆனால் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் பக்தர்கள் இன்றி கோயிலுக்குள் நடந்தது. இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் வெள்ளத்தில் சிறப்பாக நடத்தப்படும். இதற்காக மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.
எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் அதற்கேற்ப முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும். வரும் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 1ம்தேதி கருட சேவை நடைபெறும் என்று கூறியுள்ளார்
அமெரிக்காவை சேர்ந்த பக்தர் ஒருவர் பெங்களூர் டாலர்ஸ் காலனியில் 3,080 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு, ரூ3.23 கோடி ரொக்கம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கி உள்ளார். லட்டு தயாரிக்க ஆஸ்திரேலிய மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனத்தினர் பூந்தியை மட்டும் ஆட்டோமெட்டிக் முறையில் இயந்திரங்கள் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும் ஆய்வு செய்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.ஏழுமலையான் கோயில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலைய தங்க தகடுகள் மாற்றுவது குறித்து ஆகம ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
