பிரதமர் மோடி வரும் ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
செஸ் ஒலிம்பியாட் தொடர் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக வரும் 28ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். வரும் 27ம் தேதி புதுச்சேரியில் நடைபெற கூடிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் வருகை என்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியது. ஏற்கெனவே செஸ் ஒலிம்பியாட்டிற்கான ஜோதி என்பது பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இதனால் பிற நாடுகளின் கவனம் மாமல்லபுரத்தின் மீது திரும்பியுள்ளது. இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத்தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இப்போட்டியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முதல் பங்களிப்பாக ரூ.92 கோடி நிதி வழங்கியுள்ளது. முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
