
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால் இந்த இரு அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து சேர்ந்தது. வெள்ளப்பெருக்கால் அருவிகள் அனைத்தும் நீரில் மூழ்கியது. தற்போது இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பருவமழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு வரும் உபரி நீரின் திறப்பு அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி கர்நாடகத்தில் உள்ள கபினி அணையிலிருந்து 34,875 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 46,518 கன அடியுமாக மொத்தம் 81 ஆயிரத்து 393 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் 4 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்துள்ளதால் வெள்ளப்பெருக்கின்போது நீரில் மூழ்கியிருந்த ஐவர்பாணி, சினிஅருவி உள்ளிட்டவை தற்போது வெளியே தெரிகின்றன. காவிரி ஆற்றின் இருகரையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கவும், மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை 5-வது நாளாக நீட்டிக்கப்பட்டது. பிரதான அருவி செல்லும் நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலை பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதியில் ஒகேனக்கல் போலீசார், வருவாய்த்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகளை பென்னாகரம் மடம் சோதனைச்சாவடி, ஆலம்பாடி சோதனை சாவடிகளில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
