செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் வருகிற 27-ந்தேதி சென்னை வரும் வகையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேரில் சென்று பிரதமரை அழைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதையொட்டி கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவை சிறப்பாக நடத்த உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக அவர் வருகிற 27-ந்தேதி சென்னை வரும் வகையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதால் அந்த நிகழ்ச்சியோடு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடிக்கு அழைப்பிதழ் வழங்க வருகிற 19-ந் தேதி டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதால் அவரது நிகழ்ச்சிகள் சனிக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தாலும் 19-ந் தேதி திட்டமிட்டபடி டெல்லி செல்ல முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களை கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் குணமடைந்த ஒரு வாரத்திற்குள் பார்க்க அனுமதிக்கப்படுவார்களா? என்பது பற்றி பிரதமர் அலுவலக அதிகாரிகள் தான் முடிவு செய்ய முடியும். அந்த வகையில் 19-ந்தேதி அழைப்பிதழ் வழங்க அனுமதி கிடைக்காவிட்டால் அடுத்த வாரம் வேறொரு தேதியில் பிரதமரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க செல்லக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருந்தபடி மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு சென்றார். அங்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.