மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூலை12-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், எனக்கு உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என பதிவிட்டு இருந்தார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி முதலமைச்சர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலிநை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி தொலைபேசியில் உடல் நலம் விசாரித்துள்ளார். அப்போது, உடல் நலம் விசாரித்த பிரதமருக்கு நன்றி கூறிய முதலமைச்சர், மோடியிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் வரும் ஜூலை 28-ம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டி.ஆர். பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.
