கள்ளக்குறிச்சி
கனியாமூர் கலவரம் இதுவரை 108 பேர் நீதிமன்றத்தில் முதல் கட்டமாக ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் நேற்று ஜூலை 17 நடைபெற்ற போராட்டத்தில், கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பள்ளியை முற்றுகையிட்டு பேருந்துகளை எரித்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறையினரும், பொதுமக்களும் படுகாயமடைந்தனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
பேருந்தை எரித்து பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக 128 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களில் 15 பேர் சிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களில் 108 பேர் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறையை தூண்டுவது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல், கூட்டு சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதற்காக நீதிமன்றத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட நீதிபதி முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்த நிலையில், மேலும் 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயமடைந்த போலீசாருக்கு அமைச்சர்கள் ஆறுதல்..
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் காவல்துறையினர் மீது போராட்டக்கார்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர். பின்னர் வகுப்பறைகளுக்குள் புகுந்து ஸ்மார்ட் போர்டு, கணினி, பெஞ்ச், சேர் ஆகியவற்றையும் நொறுக்கினர். பள்ளி கட்டிடத்திற்கும் தீவைத்தனர். இதில், பல வகுப்பறைகள் தீக்கிரையாயின. பள்ளி அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. பள்ளி கேட், அலங்கார வளைவு ஆகியவற்றையும் உடைத்து சேதப்படுத்தினர். மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டகாரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி. கணேசன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்றைய கலவரத்தின்போது காயமடைந்த போலீசாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நேற்றைய கலவரத்தின்போது காயமடைந்த 74 போலீசார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் 44 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 44 போலீசாரை சந்தித்து அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி. கணேசன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்-:
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகம் முழுவதும் இன்று 91% தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 89%, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95%, சி.பி.எஸ்.இ பள்ளிகள் 86% இயங்கியுள்ளதாகவும், மாவட்டம் வாரியாக இன்று இயங்கிய தனியார் பள்ளிகள் விவரங்கள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் 100% அளவிற்கு பள்ளிகள் இயங்கி வருகின்றன எனவும் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும் 100% இயங்கியது என்றும், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், நாகை, அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100% பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.