கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவரை மீட்புப்படையினர் மீட்டனர். மீதி மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை அடுத்த மதகு சாலை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (34), இவரது நண்பர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (24), மனோஜ் (22), ராஜேஷ் (22) ஆகிய நான்கு பேரும், இன்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக வலைகளை எடுத்துக் கொண்டு அணைக்கரை கொள்ளிடத்தில் நடுவே நின்று வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், நான்கு பேரும் தண்ணீரில் சிக்கியுள்ளனர். மேலும் இவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீர் சுழலில் சிக்கி நான்கு பேரும் தங்களை காப்பாற்றுங்கள் என குரல் கொடுத்துள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து ஆற்று நாணலை பிடித்துக் கொண்டிருந்த கொளஞ்சிநாதனை மட்டும் மீட்டனர். மேலும் ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிட ஆற்று தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர்.இதனையடுத்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறை அலுவலர்கள் அதிகாரிகள் முகாமிட்டு கொள்ளிட ஆற்று தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட மூவரையும் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
