கேரளாவில் கடந்த ஆண்டு படகில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் சம்பவம் தொடர்பாக இன்று சென்னை, திருச்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் படகில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் வழியாக கடத்தப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள் ஆகியவற்றை கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தமிழகத்தில் 20 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் 9 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. மண்ணடி, பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் கேரளாவில் போதைப் பொருள், துப்பாக்கி கடத்தல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் சிலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று திருச்சியிலும் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் முடிவில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். கேரளாவில் உள்ள விழிஞ்சம் கடலோர பகுதியில் தான் ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவைகள் பிடிபட்டது தொடர்பான வழக்கு மே மாதம் என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்யப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்னையிலும் அப்போது சோதனை நடத்தினர். இந்த வழக்கில் வளசரவாக்கத்தில் வசித்து வந்த சற்குணம் என்கிற சபேகன் கைது செய்யப்பட்டிருந்தார். விடுதலை புலிகள் அமைப்பின் உளவு பிரிவு அதிகாரியாக இவர் இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த நிலையில் தான் சென்னை, திருச்சியில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.