
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.பிரதமர் மோடி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கியது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. தொடக்கம் முதலே திரெளபதி முர்மு முன்னிலை வகித்து வந்தார். இதில் மொத்தம் பதிவான 4754 வாக்குகளில் 53 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. 4701 வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்த வாக்குகளின் 2824 வாக்குகள் பெற்று திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மொத்தம் 6,76,803 வாக்குகள் மதிப்பு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ 1877 வாக்குகள் பெற்றுள்ளார். அவரின் மொத்த வாக்குகள் மதிப்பு 38,0,177
இதன்மூலம் திரெளபதி முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகியுள்ளார். திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராகியுள்ளதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமையை அவர் பெறுகிறார்.
திரௌபதி முர்முவின் வெற்றிக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கட்சி வேறுபாடின்றி திரெளபதி முர்முவை ஆதரித்த அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். திரௌபதி முர்முவின் வெற்றி நமது ஜனநாயகத்தின் சிறந்த முன்னுதாரணம்” எனத் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உடன் இருந்தார்.