ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அவமதிக்கப்பட்டதாக வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்ததற்கு மத்திய அரசு இன்று உரிய விளக்கம் கூறியுள்ளது.
இந்தியாவில் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்ற நிகழ்ச்சி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்தது. இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அரசு அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சித்தலைவர்கள் இணைந்து மாநிலங்களவையின் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அதில் அவர்கள், திங்கள்கிழமை மதிப்புக்குரிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, அவரது பதவிக்கு ஏற்ப இருக்கை ஒதுக்கவில்லை. ஒரு மூத்த தலைவருக்கு வேண்டுமென்றே அவமரியாதை செய்ததற்கு எங்கள் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த கடிதத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்து போட்டிருந்தனர். இந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் தாகூர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தற்போது விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் தரவரிசை மற்றும் முன்னுரிமை அட்டவணைப்படி உள்துறை அமைச்சகம் இருக்கைகளை ஒதுக்கியது. இதில் 7-வது நிலையில் வரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு 3-வது வரிசையில்தான் இருக்கை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் முன் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது’ என கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘அவர் முன்வரிசையில் அமர்ந்திருந்ததை பார்த்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நான் மூலையில் இருப்பதை கவனித்த ஒரு ஊழியர், அவரை (கார்கே) நடுப்பகுதிக்கு மாறி அமருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இதை அவர் மறுத்து விட்டார். இது எதிர்க்கட்சிகளின் மனநிலையை காட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
