மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதத்திற்கான வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் ரூ.3,419 கோடி செலுத்துமாறு வந்த ரசீது வந்ததை அடுத்து அதிர்ச்சியில் அடைந்த அவரது மாமனார், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், “மனிதத் தவறால்” இது நடந்துவிட்டதாகக் கூறி மத்தியப் பிரதேச அரசால் நடத்தப்படும் மின்சார நிறுவனம், புதிய மின் கட்டணமான ரூ.1,300-க்கான ரசீதை வழங்கி குப்தா குடும்பத்திற்கு நிவாரணம் அளித்தது.
இதுகுறித்து எம்.பி.எம்.கே.வி.வி.சி நிறுவனத்தின் பொது மேலாளர் நிதின் மங்லிக் கூறியதாவது: மிகப்பெரிய மின் கட்டணத்திற்கு மனித தவறுதான் காரணம் என குற்றம் சாட்டியவர், சம்மந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் “மென்பொருளில் பயன்படுத்தப்பட்ட மின் யூனிட்டுகளுக்குப் பதிலாக ஊழியர் நுகர்வோரின் எண்ணை உள்ளீடு செய்ததால், அதிகத் தொகைக்கான ரசீது வந்ததாகவும், பின்னர் திருத்தப்பட்ட ரூ.1,300-க்கான மின் ரசீது நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக” அவர் விளக்கம் அளித்தார்.
இது விவகாரம் தொடர்பாக மத்தியப் பிரதேச எரிசக்தி துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தவறு சரி செய்யப்பட்டுச் சம்மந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
