
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் இன்று பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்து பேசிய போது
தமிழ்நாட்டிற்கும், செஸ் விளையாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றார்.
தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து 100 இசைக் கருவிகளால் இசைக்கப்படும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடங்கியது.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல் முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடி, சதுரங்க கரை பதித்த, தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வருகை தந்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தார்.சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்குச் சென்று அங்கிருந்து சாலை வழியாக நேரு விளையாட்டரங்கத்துக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பல்வேறு மணற்ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களைக் கவர்ந்தார் ஓவியர் சர்வம் படேல். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினின் மணற் ஓவியங்களை வரைந்து சர்வம் படேல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாவில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை வண்ணமயமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் போட்டியைத் தொடக்கிவைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது இந்தியாவிற்கு பெருமைமிகு தருணம். இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக அழைப்பிதழுடன் தில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தபோது திடீர் கரோனா தொற்று ஏற்பட்டதால் செல்ல முடியவில்லை. அப்போது பிரதமர் மோடி என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர், “நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் கட்டாயம் கலந்து கொள்வேன்” எனத் தெரிவித்தார். உங்களின் பங்கேற்பு மேலும் சிறப்பு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ரஷியாவில் நடக்கவிருந்த இந்தப் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். நான்கே மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு இன்று முதல் மேலும் உயருகிறது. இது மிக சாதாரணமாக கிடைத்துவிடுவதில்லை. இந்திய துணைக்கண்டத்தில் முதல்முறையாக இந்தப் போட்டி நடக்கிறது. இரு அரசர்கள், இரு கோட்டைகள், இரு குதிரைகள், இரு அமைச்சர்கள் என கருப்பு வெள்ளை களமாகவே செஸ் உள்ளது. கீழடியில் இரு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. அவை சதுரம் விளையாட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
போர் மரபிற்கும் தமிழர்களுக்கும் தொடர்பிருப்பது இவை காட்டுகின்றன. பல்லாயிரம் ஆண்டு தொடர்பு தமிழர்களுக்கும், சதுரங்கத்திற்கும் உள்ளது. அறிவுடன் தொடர்புடைய விளையாட்டு சதுரங்கம். மூளை சார்ந்த இந்த விளையாட்டு அறிவை நம்பிய விளையாட்டு. இந்த விளையாட்டை தமிழகத்தில் இந்தியாவில் மேலும் பரவச் செய்ய இந்தப் போட்டி உதவியாக இருக்கும். அதற்கு இந்த ஒலிம்பியாட் சிறப்பான துவக்கமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.” என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன இந்த நிலையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது சிறப்புவாய்ந்ததாகும்.
மிகக்குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளனர். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் முதன்முறையாக நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிலிருந்து பல செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டிற்கும், செஸ் விளையாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தப் போட்டியின் மூலம் இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டியும் இன்று பிரிட்டனில் தொடங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா உங்களை அன்புடன் வரவேற்கிறது எனக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களிலுள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகமாகும். பல விளையாட்டுப் போட்டிகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன. இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்களில் உள்ள நமது வீரர்கள் வெற்றிகளை ஈட்டும் காலகட்டம் என பேசினார் மோடி.
தமிழ் பண்பாடு குறித்து கமல் ஹாசனின் குரலில் அரங்கேற்றப்பட்ட நிகழ்த்துக்கலைக்கு முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து கூறினார் பிரதமர் மோடி.இதனால் மகிழ்ச்சி அடைந்தார் ஸ்டாலின்.


முன்னதாக காா் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த பிரதமா் மோடிக்கு வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்னும் சில நிமிடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவிருக்கிறார்.
தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் பங்கேற்றார். நடிகர் கார்த்தி உதயநிதி ஸ்டாலின் துர்க்கா ஸ்டாலின் கனிமொழி எம்.பி உட்பட பலர் பங்கேற்றனர் இந்தியாவின் புகழ்பெற்ற 8 வகை நடனங்களும் இடம்பெற்றன. இசையில் சிறந்த கலைஞர்கள் தங்களது இசையால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.