December 9, 2024, 1:03 AM
26.9 C
Chennai

பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி ..

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, கவர்னர் மாளிகை சென்றடைந்தார். அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.தமிழக அரசுக்கு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

மகாபலிபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, கவர்னர் மாளிகை சென்றடைந்தார்.

அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஏற்கெனவே திட்டமிட்டபடி நடந்த தமிழக பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடி சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.அப்போது பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ALSO READ:  ஸ்ரீவி., வடபத்ரசாயி பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இரவு 11 மணி வரை நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குபிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த நிர்வாகிகள், பழைய நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் போன்ற அரசியல் நிகழ்வுகள் எதுவும் இல்லை. எனவே, பிரதமர் மோடி உடன் இன்று நாங்கள் அரசியல் பேசவில்லை.

பாஜக எப்போதும் கொள்கை ரீதியாகச் செல்லும் கட்சி. எங்கள் கொள்கையை பாஜக ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது. கடந்த முறை பிரதமர் சென்னை வந்து இருந்த போதே, முதல்-அமைச்சர் பெரிய மனதோடு நடந்து இருக்க வேண்டும் என்றும் அது அரசியல் களம் இல்லை என விமர்சித்து இருந்தேன். ஆனால் இன்று நான் முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். எப்போதும் ஆளும் கட்சியை விமர்சித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை. செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் தொடர்பாக மதுரை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. மிகச் சரியான தீர்ப்பு அது. நேற்று மாலை முதலே தமிழக அரசு தனது தவறை சரி செய்யத் தொடங்கி இருந்தது. விளம்பரங்களில் நேற்று முதலே பிரதமர் படம் இடம் பெற்று இருந்தது. பாஜக ஒரு கட்சியாகப் பிரதமர் படத்தை வைக்க வேண்டும் எனக் கேட்கவில்லை.

ALSO READ:  செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்!

சில தொண்டர்களை அதைக் கேட்டிருக்கலாம். கட்சியாக நாங்கள் பிரதமர் படத்தைப் போட வேண்டும் எனக் கேட்கவில்லை. தமிழக மக்கள் அன்பைப் பெற்று ஆட்சிக்கு வரும் போது, அதை நாங்கள் செய்வோம். ஆளும் கட்சி தானாகச் செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு முக்கியமானது. வரும் காலத்தில் தமிழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இந்த சூழலில் மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கிறோம். அந்தத் தீர்ப்பை வைத்தும் அரசியல் பேச விரும்பவில்லை.

கடந்த முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவரைப் போல நடந்து கொண்டார் என விமர்சித்து இருந்தேன். ஆனால், இந்த முறை தான் அவர் முதல்-அமைச்சர் போல நடந்து கொண்டார். இன்று தமிழனாக நான் பெருமை கொள்கிறேன். தமிழர் பாரம்பரியம் உலகம் முழுவதும் இன்று காட்டப்பட்டு உள்ளது கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 5000 ஆண்டுக்கால கலாசாரம் இந்த நிகழ்ச்சியில் பிரதிபலித்தது. இதற்காகத் தமிழக முதல்-அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் பாஜக சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சியைப் பாராட்டுவதால் கூட்டணி என்று அரத்தம் ஆகாது” என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ:  இராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக ரூ.1.17 கோடி மோசடி: 5 பேர் கைது
author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week