சென்னையின் மக்களின் மகிழ்ச்சிகரமான வரவேற்பால் மகிழ்ந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகின்றன. இதன் தொடக்கவிழா விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். இதில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளும், தமிழர்களின் பெருமையை வெளிப்படுத்தும் விளக்கக் காட்சிப் படமும் பார்வையாளர்களை கவர்ந்தது .
முன்னதாக, நாட்டின் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் இந்திய கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, செஸ் ஒலிம்பியாட் ஜோதி, தமிழக செஸ் வீரா்கள் பிரக்ஞானந்தா, விஜயலட்சுமி, குகேஷ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.இந்நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எப்போதும்போல் ஆச்சரியமூட்டி அன்பைப் பொழிந்துள்ள சென்னையே,
அற்புதமான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்!’ என்று புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.