
தமிழகத்தின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியபோது இளைஞர்களின் சாதனைகளை கொண்டாட நாம் இங்கு கூடியிருக்கிறோம் என்றார்.
பட்டமளிப்பு விழாவுக்கு இன்று காலை 9.55 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்குக்கு வந்தார். அவரை பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி வாசலில் நின்று வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோரும் வரவேற்றனர். பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்பதால் அங்குள்ள அறைக்கு சென்று பட்டமளிப்பு விழாவுக்கான அங்கி அணிந்து வந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் அங்கி அணிந்து வந்திருந்தனர். பட்டமளிப்பு விழா மேடைக்கு சரியாக காலை 10 மணிக்கு வந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

விழாவுக்கு வந்த அனைவரையும் துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கத்தால் ஆன பதக்கங்களை வழங்கி பேசியதாவது,

பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் வாழ்த்துகள். மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் இது முக்கியமான நாள். ஏனெனில், அவர்கள்தான் இளைஞர்களை உருவாக்குகிறார்கள். தேசத்தை கட்டமைப்பவர்கள் அவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மாறலாம். ஆனால், ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள்.
இளைஞர்களின் சாதனைகளை கொண்டாட நாம் இங்கு கூடியிருக்கிறோம். இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள். இந்திய இளைஞர்கள் மீது இந்த உலகமே நம்பிக்கை வைத்திருக்கிறது.
‘இளைஞர்களே எனது நம்பிக்கை’ என்று சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றைக்கும் பொருந்தும். அதுபோல, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை அப்துல் கலாம். அவரது சாதனைகள் இன்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறது.
கரோனா பெருந்தொற்று எதிர்பாராத ஒரு சம்பவம். நூறாண்டுக்கு வரும் ஒரு சோதனை இப்போது வந்துவிட்டது. அதிலிருந்து மீள உதவிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி.
ஒரு வலுவான அரசால் எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், தனது கொள்கைகளால் மக்களை வழிநடத்திச் செல்ல முடியும். மக்களின் பங்களிப்புக்கு அதிக முக்கியத்துவத்தை வலுவான அரசால் மட்டும் இக்கொடுக்க முடியும். அந்த வகையில், புதிய கல்விக்கொள்கை மூலமாக மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும்.
இந்தியாவில் ஒவ்வொரு துறையும் வளர்ந்து வருகிறது. செல்போன் தயாரிப்பில் கடந்த ஆண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கும் மாணவர்களுக்குமான காலம்.
மாணவர்களின் கற்றலே இந்தியாவின் கற்றல். மாணவர்களின் வெற்றியே, இந்தியாவின் வெற்றி, மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. உங்களது வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் தீட்டும்போது இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து தீட்டுகிறீர்கள். அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் என்று பேசினார்.
அதன்பின்னர், பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி. முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பட்டம் பெற்ற 69 மாணவர்களில் 31 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் படித்தவர்கள். மீதமுள்ள 38 பேர் இதர பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் படித்து முதலிடம் பிடித்தவர்கள் ஆவர்.

பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘கல்வி என்பது யாராலும் பறிக்க முடியாத சொத்து. பட்டம்பெற்ற நீங்கள்தான் நாட்டை செழிக்கச் செய்யும் வல்லுநர்கள். பழைமைவாதத்தை புறந்தள்ளி புதிய கருத்துகளை ஏற்று மாணவர்கள் பகுத்தறிவு பாதை நடைபோடுவதுடன் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதைத் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும். தமிழர்கள் தொழிநுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்’ எனத் தெரிவித்தார்.இறுதியாக பிரதமர் மோடி விழா பேரூரை நிகழ்த்தினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கு பிறகு 70 ஆண்டுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று பதக்கங்கள் வழங்கி உள்ளார்.

முன்னதாக நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறிய போது இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முதலிடம். 53% பேர் உயர்கல்வி பயில்கின்றனர், அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம். பதக்கம் பெறும் 69 பேரிலும் 39 பேர் பெண்கள். அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தவர் முதல்-அமைச்சர். உயர்கல்வியில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இத்திட்டம். தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர் நிச்சயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் திரண்டுள்ள பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி வருகையால் பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.