
‘2023’ம் புத்தாண்டுக்கான தினசரி, மாதக் காலண்டர்கள் மற்றும் டைரிகளுக்கான புதிய ஆல்பங்கள் தயாராகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தயாரிக்கப்படும் தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் மிகவும் தரம் மற்றும் வித்தியாசமான வடிவங்களில் தயாரிக்கப்படுவதால் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும், சிவகாசியில் தயாராகும் காலண்டர்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.
தினசரி, காலையில் அனேகம்பேர் கண்விழிப்பது காலண்டர்களின் முன்பு தான். முடிந்த நாளை கிழித்து, கசக்கி எறிந்துவிட்டு, புதிய நாளில் என்ன விசேஷம் என்று பார்ப்பது தான் வழக்கம்.
காலண்டர்களில் கிழிக்கப்படும் அந்த தாளில் பல அறிஞர்கள், ஞானிகள், ஜோதிட வல்லுனர்கள், காலண்டர் வடிவமைப்பாளர்கள், மற்றும் பல தொழிலாளர்களின் உழைப்பு இருப்பது பலருக்கு தெரியாது.
சிவகாசியில் 50க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ‘2023’ம் புத்தாண்டுக்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக வரும் புத்தாண்டில் வெளியிடப்படும் காலண்டர்களின் மாதிரிகள் அடங்கிய ஆல்பங்கள் தயாரிக்கப்படும். கடந்த 3 மாதங்களாக, புதிய காலண்டர்களுக்கான ஆல்பங்கள் தயாரிக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வந்தது. தற்போது புத்தாண்டுக்கான புதிய காலண்டர் ஆல்பங்கள் முழுமையாக தயாராகியுள்ளது. புதிய ஆல்பங்கள் ஆகஸ்ட் 3ம் தேதி (ஆடி 18ம் தேதி) புதன் கிழமை, ஆடிப்பெருக்கு நாளில் வெளியிடப்படுகிறது. காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்களில், புதிய காலண்டர் ஆல்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜைகள் நிறைவு பெற்றவுடன், காலண்டர் நிறுவனங்களின் முகவர்களுக்கு ஆல்பங்கள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களிடம், புத்தாண்டுக்கான காலண்டர் மாதிரிகளை காண்பித்து முகவர்கள் ஆர்டர்கள் எடுத்து, காலண்டர் நிறுவனங்களுக்கு அனுப்புவார்கள். அதன் பின்பு ஆர்டர்களுக்கு ஏற்ப காலண்டர்கள் தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
“2023” புத்தாண்டை வரவேற்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட புதிய ரகங்களில் காலண்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மதங்களின் சுவாமி படங்கள், புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், பிரசித்திபெற்ற ஸ்தலங்கள், இயற்கை காட்சிகள், நாட்டின் முக்கிய மற்றும் பிரபலமான இடங்கள், சுற்றுலா தலங்கள், பிரபல நடிகர்கள் என காலண்டர்களை அலங்கரிக்கும் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான காலண்டர் ரகங்களுடன், புதிய வடிவமைப்பில் டை கட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், கோல்டன் பாயில்ஸ், சில்வர் பாயில்ஸ், ஜெயிண்ட், முப்பரிமாணம் (3 டி) காலண்டர், பெட் பாயில்ஸ், கோல்டன் பாயில்ஸ் போட்டோ பிரேம் காலண்டர் என பல ரகங்களில் காலண்டர்கள் தயாராகியுள்ளன. மேலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் சில்ட்ரன்ஸ் மினி காலண்டர்கள் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் ஆங்கிலம் எழுத்துகள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் அதற்கான படங்களுடன் வண்ணமயமாக தயாராகியுள்ளது.
காலண்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கற்பகா காலண்டர் நிறுவன உரிமையாளர் ஜெய்சங்கர் கூறும்போது, ஆடிப்பெருக்கு நல்ல நாளில் 2023ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் ஆல்பம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான காலண்டர்களுடன், இந்த ஆண்டும் புதிய ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காலண்டர் தயாரிக்கும் பேப்பரின் விலை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகரித்துள்ளது. அட்டை, காலண்டர் தயாரிப்பிற்கான மூலப் பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது மின் கட்டணமும் அதிகரித்துள்ளது. மேலும் அச்சகங்களில் பயன்படுத்தப்படும் வண்ண மையின் ஜி.எஸ்.டி. வரியும் 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. காலண்டர் தயாரிப்பிற்கு தேவையான அனைத்துப் பொருட்கள், மின் கட்டணம், ஜி.எஸ்.டி.வரி உயர்வு என அனைத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு காலண்டர்களின் விலையும் 35 சதவிகிதத்தில் இருந்து 45 சதவிகிதம் உயரும் வாய்ப்புள்ளது. விலை உயர்வு தவிர்க்க முடியாதது. ஆனாலும் எங்கள் நிறுவனத்தின் காலண்டர்களின் தரம், வாடிக்கையாளர்களை மிகவும் திருப்தி படுத்துவதாக இருப்பதால், வழக்கமான அளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
