தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்ற அனுமதி கிடைக்காததை தொடர்ந்து அதனை விற்பனை செய்யப்போவதாக கடந்த ஜூன் மாதம் அனில் அகர்வால் அறிவித்திருந்தார். தற்போது அதனை வாங்க 7 நிறுவனங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பின்னணியில் சீனா இருந்ததாக அனில் அகர்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு சீனா பண உதவி செய்ததாகவும் அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காப்பர் ஒயர்களை இந்தியா தயாரிக்க உலகம் விரும்பவில்லை என்றும் அனில் அகர்வால் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் 100வது நாளில் நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்த நிலையில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து ஆலையை மூட மே 28ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆலையை மூட அரசு பிறப்பித்த உத்தரவு சரிதான் என 2020ம் ஆண்டு ஆகஸ்ட்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
