பட்டாசுக்கடை உரிமையாளர்கள், 10 மீட்டர் துாரத்திற்கு தண்ணீரை பீய்ச்சும் தீயணைப்பான் கருவியை வைத்திருப்பது, தொழிலாளிகள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகளை பட்டாசுக்கடை வைத்திருப்பவர்கள் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என பட்டாசு தொழில் பாதுகாப்பு ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு, வெளிநாடுகளில் உள்ள பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் மத்திய தொழில், வர்த்தக அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசின் தொழில், வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இக்குழுவினர் 5வது முறையாக இணைய வழியில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இக்குழுவில் இடம் பெற்ற டான்பாமா தலைவர் கணேசன் கூறியதாவது,
பட்டாசு கடைகளில் 2 கேஜி கொள்ளளவு உள்ள 10 மீ., துாரம் பீய்ச்சி அடிக்க கூடிய தீயணைப்பான் வைக்க வேண்டும். கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
விபத்து ஏற்பட்டால் உடனே தீயணைப்பு துறை, போலீசுக்கு தகவல் தெரிவிக்க சிக்னல் லேயர் அமைக்க வேண்டும். கடையில் 500 லி., தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். கடை உரிமையாளர், தொழிலாளர்கள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனடியாக அலாரம் அடிக்க ஐ.எஸ்.ஓ., தரச்சான்று கருவி பொருத்த வேண்டும்.
எளிதில் தீப்பிடிக்காத மின் வயர் சுவிட்சுகளை கடைகளில் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் குறித்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.