சங்கரன்கோவிலில் சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண கோவிலும் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
கோவிலில் கடந்த 31-ந்தேதி ஆடித்தவசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி, அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆடித்தபசு திருவிழாவின் போது சங்கரநாராயணசாமி கோவிலில் உள்ள பிரகாரத்தில் “108” சுற்று சுற்றினால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்படி கொடி யேற்றத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் “108” முறை கோவிலை சுற்றி வருகின்றனர். ஆடித்தபசு திருவிழாவின முக்கிய நிகழ்ச்சியான சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவிலில் தேரோட்டம் 9-ம் திருநாளான இன்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம்.
சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தவசு காட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.