ராஜ்யசபாவில் இன்று நடந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில், கடும் உழைப்பு, விடா முயற்சிகளுடன் நாயுடு சிறப்பாக செயல்பட்டதாக’ பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக.,10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நடைபெற்ற துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான மேற்குவங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆக.,11ல் பதவியேற்க உள்ளார்.
நாளை மறுநாளுடன் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது அப்போது அங்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைவராக, எம்பியாக, மத்திய அமைச்சராக, துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு செயல்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி நிறையில் அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். மாநிலங்களவைக்கு இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம் ஆகும்.
மாநிலங்களவையின் பல வரலாற்றுத் தருணங்கள் வெங்கையா நாயுடுவின் அழகான செயல்பாடுகளும் தொடர்புடையவை ஆகும். வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும், கம்பீரமும் இருக்கும்; அவரின் சாமர்த்தியத்திற்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். துணை ஜானாதிபதி வெங்கையா நாயுடு மிகவும் புத்திசாலித்தனமாக பேசக் கூடியவர். அனைத்து மொழிகளிலும் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் அற்புதமானவை. இளைஞர்களுடன் வெங்கையா நாயுடுவுக்கு நல்ல புரிதல் உள்ளது. எல்லா திட்டங்களையும் மேம்படுத்துவதற்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கியவர் வெங்கையா.
கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் அனைத்து பொறுப்புகளை சிறப்பாக கையாண்டவர் வெங்கையா. எந்த தருணத்திலும் சூழலுக்கு ஏற்ப செயல்படுவதில் திறன் படைத்தவர் வெங்கையா இவ்வாறு பாராட்டு தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் எங்களின் கொள்கையில் நமக்குள் வேறுபாடுகள் இருந்துள்ளது. இதனால் உங்களுக்கு நாங்கள் சில மனக்கஷடத்தை கொடுத்திருக்கலாம். ஆனாலும் நீங்கள் அவையை சிறப்பாக கொண்டு செல்வதில் கவனமாக இருந்தவர். உங்களுக்கு நன்றி .உங்களின் பணி என்றும் போற்றுதலுக்குரியது. 3 முறை எம்பி.யாக இருந்து செம்மையனா பணிகள் ஆற்றிய போது உங்களுடன் இருந்துள்ளோம் என்ற பெருமையும் உண்டு. கர்நாடகா, ஐ தராபாத் தொடர்பான 371 ஜே நிறைவேற்ற துணையாக இருந்தமைக்கு நன்றி. என அவர் பேசினார்.
