ஜம்மு -பயங்கரவாதிகள் குண்டுகளை வீசி தாக்கியதில் போலீஸ்காரர் பலி..

Published:

ஜம்மு காஷ்மீரில் தொடர் சம்பவம்- பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் போலீஸ்காரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த புதன்கிழமை இரவு காஷ்மீரின் புட்காம் பகுதியில் போலீசாருடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மறுநாள் அதிகாலையில் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீரில் பீகார் தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் குல்காம் மாவட்டத்திற்கு உட்பட்ட கைமோ பகுதியில் பயங்கரவாதிகள் போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பூஞ்ச் பகுதியை சேர்ந்த தாகீர்கான் என்ற போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சக காவலர்கள் மீட்டு அனந்தநாக் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் என ஜம்மு-காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்கிடையே ஸ்ரீநகரிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்குள்ள ஈத்கா சாலையில் பாதுகாப்பு படையினர் சென்றபோது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

1745993 bombddd - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img